உலக நாடுகள் மன்றம் சின்னஞ் சிறு நாடுகளின் விடுதலை வேட்கையைத் தணித்து வருகிறது. தனி நாடுகளாக பல நாடுகள் ஏற்கப்படும் காலம் கனிந்து வருகிறது.
சோவியத் ஒன்றியம் சிதறிப் போகும் முன்னர் இருந்த சியார்சியாவில் தன்னாட்சியுடன் இயங்கிய பகுதி சௌத்ஒசட்டியா ஆகும். 1506 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவில் 70,000 மக்கள் அங்கு வாழ்ந்தனர். விடுதலை கோரி மக்கள் இருமுறை பொது வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளனர். 1992 இல் ஒருமுறையும் நவம்பர்த் திங்கள் 12 ஆம் பக்கல் 2006 இல் மறுமுறையும் பொது வாக்கெடுப்பில் தனி நாடாக விழைவு தெரிவித்து அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். இன்னமும் தனிநாடாக ஆகவில்லை. உலக நாடுகள் மன்றம் அந்நாட்டை சியார்சியாவின் ஒரு பகுதியாகவே இன்னமும் கருதுகிறது. ஆயின் அந்நாடு தன்னை தனிநாடாக அறிவித்துக் கொண்டது. இன்று அந்நாட்டுக் குடியரசுத் தலைவராக எட்வர்டு கொக்கோடியும் தலைமை அமைச்சராக யூரி மொரோசோவும் உள்ளனர். ஒசட்டியன் மொழியும் உருசிய மொழியும் ஆட்சி மொழிகளாக உள்ளன.
சியார்சியா நாட்டின் இன்னொரு பகுதி மக்கள் 8432 சதுரக் கிலோ மீட்டரில் வாழ்கின்றனர். 1,90,000 மக்கள் வாழும் அப்காசியா சூலைத்திங்கள் 23 ஆம் பக்கல் 1992 இல் விடுதலை பெற்ற தனிநாடாக அறிவித்துக் கொண்டது. இன்று அந்நாட்டுக் குடியரசுத் தலைவராக செர்காய் பகபக்சு அவர்களும் தலைமை அமைச்சராக அலெக்சாண்டர் அன்க்வாப் அவர்களும் உள்ளனர்.
டிரான்சுநிசுடிரியா நாடு செப்டம்பர் 2-1990 இல் தனி நாடாக அறிவித்துக் கொண்டது. 1607 சதுரக்கிலோ மீட்டர் பரப்பளவுடன் 5,37,000 மக்கள் வாழும் டிரான்சு நிசுடிரியா நாட்டின் குடியரசுத் தலைவராக இக்னோர் இசுமிநோவ் உள்ளார். மோலடோவில் இருந்து பிரிந்துள்ளது இந்த நாடு!
இந்த மூன்று நாடுகளும் தனி நாடுகள். தனி அரசுகள் நடந்து வருகின்றன. பாராளுமன்றமும் உள்ளது. குடியரசுத் தலைவர்களும் தலைமை அமைச்சர்களும் உள்ளனர். இந்த மூன்று நாடுகளுக்கும் விடுதலையை யாரும் வெற்றிலைப் பாக்கு வைத்து வழங்கவில்லை. அவை தாமாகவே தத்தமது நாட்டு விடுதலையை உலகுக்கு அறிவித்துக் கொண்டன. தனி நாடுகளாக இயங்கி வருகின்றன.
இந்த மூன்று நாடுகளும் உலக நாடுகள் மன்றம் தங்கள் நாடுகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. வாதாடி வருகின்றன. அவர்களின் நம்பிக்கை வீண் போகாது. நெடிய நாட்கனவு நனவாகும் அறிகுறிகள் உலக அரங்கில் ஒளி விடுகின்றன.
யூகோசுலாவிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்த மொண்ட்நீக்ரோ நாட்டு மக்கள் பொது வாக்கெடுப்பில் மேத்திங்கள் 21 ஆம் பக்கல் 2006 இல் விடுதலை வேண்டும் என்றனர். 3 சூன் 2006 இல் தனி நாடாகவே அறிவித்துக் கொண்டனர். சூன் 28-2006 இல் அந்நாட்டை உலக நாடுகள் மன்றம் 192 ஆவது உறுப்பு நாடாக ஏற்றுக் கொண்டுள்ளது. மே 11-2007 இல் ஐரோப்பிய ஒன்றியம் 47 ஆவது உறுப்பு நாடாக மொண்ட்நீக்ரோ நாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கொசவோ நாடு பெற்ற உரிமையும் நமக்குப் பாடமாகும். 1999 இல் உள்நாட்டுப் போர் ஏற்பட்டதைத் தொடர்ந்து உலக நாடுகள் மன்றத்தின் இடைக்கால ஆளுமையில் கீழ்வந்த கொசவோ நாடு பிப்ரவரி 2008 இல் தனிநாடாக அறிவித்துக் கொண்டது. உலக நாடுகள் மன்றம் கொசவோ நாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுள்ளது. அந்நாட்டுக்குப் புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கொசவோ குடியரசுத் தலைவர் ஃபாட்மிர் செசுடியூ, தலைமை அமைச்சர் ஆசிம் தாசி இருவரும் புதிய அரசமைப்புச் சட்டத்தில் கையொப்பமிட்டு ஏற்றுள்ளனர். ஏப்ரல் 8-2008 இல் நடந்த இந்த நிகழ்வால் சூன் 15-2008 முதல் அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வரும். சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் இவ்வரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் நடுவராக இருந்து உதவியது.
மொண்ட்நீக்ரோ நாடும் கொசவோ நாடும் உலக நாடுகள் ஒன்றியத்தில் இன்று ஏற்கப்பட்டுவிட்ட தனி நாடுகள். தனி அரசுடன் அவை இயங்க உலகமே உதவிக்கரம் நீட்டியது. இதைப் பார்த்துவிட்டு சௌத்ஒசட்டியா, அப்காசியா, டிரான்நிசுடிரியா நாடுகளும் தங்கள் நாடுகளின் விடுதலையை உலகநாடுகள் மன்றம் ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.
உலக நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்காத தமிழ் நாட்டின் 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்ஈழத்துக்கு ஆதரவுக் குரல் எழுப்பாமல் பாராமன்றத்தில் ஊமைகளாய் ஆமைகளாய் உட்கார்ந்துள்ளனர். கொசவோவில் உள்நாட்டுக்குழப்பம் என்றதும் உலக நாடுகள் மன்றம் அமைதிப்படை நிறுத்தி இடைக்கால ஆட்சியை ஏற்று இன்று அந்நாட்டு விடுதலைக்கு வழி கோலியது.
இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்று இடைக்கால ஆட்சி ஏற்படுத்திய போது, கொசவோவில் நடந்து கொண்ட உலக நாடுகள் மன்றம் போல நடுநிலைமையுடன் இந்தியா செயல் பட்டிருந்தால் தமிழ்ஈழம் விடுதலை பெற்று பல்லாண்டுகள் ஆகி இருக்குமே?
தனி நாடுகளாக தம்மைத் தாமே அறிவித்துக் கொண்ட மொண்ட்நீக்ரோ நாட்டையும் கொசவோ நாட்டையும் ஏற்றுக் கொண்டுள்ள உலக நாடுகள் மன்றம் சௌத்ஒசட்டியா, டிரான்சுநிசுடிரியா, அப்காசியா நாடுகளின் தனி நாட்டு அறிவிப்பை ஏற்க வேண்டும் என வாதாடக் கூட இந்திய நாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர்களுக்கு நெஞ்சுரம் இல்லாமல் போனது ஏன்?
சின்னஞ்சிறு நாடுகளின் விடுதலைக்கு வரவேற்புப் பண்ணிசைக்கும் உலக நாடுகள் மன்றம் தமிழ் ஈழம் மலரத் துணை புரியாமல் வாய் மூடி மௌனியாக இருப்பதை உலகின் பன்னாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் குமுறும் நெஞ்சுமுடன் கூர்ந்து நோக்கி வருகின்றனர்கள். உலகமே விடுதலை நோக்கிச் செல்கையில் தமிழ் ஈழத் தமிழன் மட்டுமே அடிமைச் சங்கிலியால் கட்டுண்டு இருக்க வேண்டுமா? விடுதலை பிறர் தருவதன்று என்பதற்கு மேற்சொன்ன நாடுகளே சான்று. தமிழ் ஈழ விடுதலையை தமிழ் ஈழ மக்களே அறிவிக்கட்டும்! உலகம் பணிந்தே தீரும்!!
நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுச்சேரி, இந்தியா